பெங்களூரு பெண் என்ஜினீயரை கணவரே தீர்த்துக்கட்டியது அம்பலம் நண்பருடன் சிக்கினார்

சூளகிரி அருகே கருகிய நிலையில் பிணமாக கிடந்தது பெங்களூருவை சேர்ந்த பெண் என்ஜினீயர் என்பதும், அவரது கணவரே கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Update: 2018-02-10 23:15 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது காமன்தொட்டி. இங்குள்ள வனப்பகுதியில் கடந்த மாதம் 6-ந் தேதி உடல் கருகிய நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் இறந்தவர் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வனப்பகுதியில் பிணமாக கிடந்தது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அக்‌ஷதா (வயது 30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சந்திரகாந்த். இவர் பெங்களூருவில் சொகுசு ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அக்‌ஷதா. இவர் பெங்களூருவில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்திரகாந்த், அக்‌ஷதாவை அடித்துக்கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் தனது நண்பர் ராஜிந்தர்சிங் என்பவருடன் சேர்ந்து, ஒரு காரில் அக்‌ஷதாவின் உடலை போட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு வனப்பகுதியில் அக்‌ஷதாவின் உடலை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். மேலும் அக்‌ஷதாவின் செல்போனை வட மாநிலங்களுக்கு செல்லும் லாரியில் வீசி சென்றனர்.

இந்த நிலையில் அக்‌ஷதாவின் தாயார் பெங்களூரு சம்பங்கிராம நகர் போலீசில் தனது மகளை காணவில்லை என புகார் செய்துள்ளார். அக்‌ஷதாவின் செல்போன் எண்ணை போலீசார் பரிசோதனை செய்தபோது அது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநிலத்தின் சிக்னலை காட்டியது. இதனால் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் சந்திரகாந்த் நடவடிக்கையின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அக்‌ஷதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரையும், ராஜிந்தர்சிங்கையும் போலீசார் கைது செய்தனர். விரைவில் இருவரையும் சூளகிரிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

குடும்பத்தகராறில் பெங்களூரு பெண் என்ஜினீயரை கணவரே தீர்த்துக்கட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்