மேய்ச்சல் நிலமாக காட்சி அளிக்கும் தூசூர் ஏரி விவசாயிகள் கவலை

போதிய மழை பெய்யாததால் நாமக்கல் அருகே உள்ள தூசூர் ஏரி மேய்ச்சல் நிலமாக காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2018-02-10 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 700 மி.மீட்டர் ஆகும். கடந்த ஆண்டு சராசரி அளவையொட்டி மழை பெய்தாலும், தற்போது பெரும்பாலான ஏரிகள், குளங்கள் வறண்ட நிலையில் தான் காணப்படுகின்றன.

மாவட்டத்திலேயே பெரிய ஏரி என்று அழைக்கப்படும் தூசூர் ஏரியும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இதனால் தூசூர் ஏரி மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது.

குடிநீர் பிரச்சினை

இதேபோல் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டமும் ‘கிடுகிடு’ என குறைந்து வருகிறது. இதனால் சில கிராமங்களில் கோடைக்காலம் தொடங்கும் முன்பே குடிநீர் பிரச்சினை தொடங்கி விட்டது. இதை சமாளிக்க மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இருப்பினும் வருகிற கோடை காலம் பெரும் சவாலாகவே இருக்கும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் ‘கிடுகிடு’ என குறைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்