ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 21 பவுன் நகை, பணம் திருட்டு மர்ம பெண் கைவரிசை

திருமங்கலத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 21 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், ஏடிஎம் கார்டுகளை திருடி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2018-02-10 20:45 GMT
திருமங்கலம்,

நெல்லை மாவட்டம் நான்குநேரி தளபதி சமுத்திரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அருண். இவரது மனைவி உமா (வயது 62). இவர் மதுரையில் இருக்கும் தனது மகளை பார்க்க திருநெல்வேலியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சில் வந்தார். விருதுநகர் கலெக்டர் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் ஒரு பெண் பஸ்சில் ஏறி, மூதாட்டி அருகில் அமர்ந்தார்.

அவர் கப்பலூர் டோல்கேட்டில் தான் இறங்க இருப்பதாக கூறினாராம். அதைத்தொடர்ந்து மூதாட்டி அருகில் வைத்திருந்த தனது பையை எடுத்த போது, பை இருக்கட்டும் இடைஞ்சலாக இல்லை என்று அந்த பெண் கூறினாராம். இதையடுத்து திருமங்கலம் பஸ்நிலையம் வந்ததும், அந்த மர்ம பெண் வேகமாக இறங்கி சென்று விட்டாராம்.

பஸ் சிறிது தூரம் சென்றதும், மூதாட்டி தனது பையில் இருந்த செல்போனை எடுத்த போது, அதில் 21 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த பர்சை காணாதது கண்டு திடுக்கிட்டார்.

அப்போது தனக்கு அருகில் இருந்த பெண் பர்சை திருடி சென்றதாக அவர் கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம பெண்ணை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்