ரவுடி பினுவின் நெருங்கிய நண்பர் கரூரில் கைது

ரவுடிகள் புடைசூழ பிறந்த நாள் விழா கொண்டாடிய பினுவின் நெருங்கிய நண்பரான மாதவனை கரூரில் போலீசார் கைது செய்தனர். அவர்தான் பினுவுக்கு கரூரில் வாடகைக்கு வீடு பிடித்து கொடுத்தது தெரியவந்தது.;

Update: 2018-02-10 23:15 GMT
பூந்தமல்லி,

சென்னை மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள லாரி செட்டில் பிரபல ரவுடி பினு, தனது பிறந்தநாளை 150-க்கும் மேற்பட்ட ரவுடிகள் புடைசூழ கொண்டாடினார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ஆயுதங்களுடன் வந்த ரவுடி பல்லுமதன், பள்ளிக்கரணையில் போலீசாரிடம் சிக்கிய போது இந்த விவரத்தை தெரிவித்தார்.

ஒரே இடத்தில் ரவுடிகள் அனைவரும் ஒன்று கூடுவதால் உஷாரான போலீசார், ரவுடிகளை சுற்றி வளைத்து 75 பேரை கைது செய்தனர். ஆனால் ரவுடி கும்பலின் தலைவனான பினு, தனது கூட்டாளிகளான கனகு, விக்கியுடன் தப்பி ஓடிவிட்டார். மேலும் சிலரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விழாவுக்கு மூளையாக செயல்பட்டது லாரி செட் உரிமையாளரான திண்டிவனத்தைச் சேர்ந்த வேலு என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் செங்கல்பட்டில் முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் ரவுடி பினுவின் நெருங்கிய கூட்டாளியான முகேஷை நேற்று முன்தினம் பட்டுக்கோட்டையில் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பினுவின் நெருங்கிய நண்பரான மாதவன் என்பவரை நேற்று கரூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரவுடி பினு, சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியில் கரூரைச் சேர்ந்த மாதவன் முடிவெட்டும் கடை நடத்தி வந்தார். அப்போது பினுவுக்கும், மாதவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருங்கிய நண்பர்களானார்கள்.

கொலை, ஆள்கடத்தல் வழக்குகளில் ரவுடி பினுவின் மீது போலீசாரின் கெடுபிடி அதிகரித்ததால் சென்னையில் இருக்க முடியாமல் மறைவான இடம் தேடி அலைந்த பினுவுக்கு, கரூர் மருத்துவ நகரில் ஒரு ஆசிரியை வீட்டை மாதவன்தான் வாடகைக்கு பிடித்து கொடுத்தார்.

கரூர் மருத்துவர் நகரில் ரவுடி பினு வீடு வாடகைக்கு எடுத்து 2 ஆண்டுகளாக தங்கிய போது அங்கிருந்தவர்களிடம் தனது பெயர் அசோக் என தெரிவித்திருக்கிறார். மேலும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், சினிமாவில் துணை நடிகராக நடிப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் ரவுடி பினு வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்றதாலும், அவரது தோற்றத்தை வைத்து அவர் துணை நடிகராக இருக்கலாம் என நம்பினர். ஆனால் தற்போது அவர் பிரபல ரவுடி என்பது தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கரூர் மருத்துவர் நகரில் தங்கி இருந்தபடியே திருச்சி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்து ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலை உள்ளிட்டவற்றை பினு செய்து வந்துள்ளார்.

ஆனால் இந்த சம்பவங்களில் பினு நேரடியாக ஈடுபடாமல் மறைமுகமாக செயல்பட்டு வந்ததால் அவர் மீது போலீசாருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. கடந்த மாதம் 28-ந் தேதி வரை பினு அந்த வீட்டில்தான் தங்கி இருந்தார். பிறந்தநாள் விழா கொண்டாடத்தான் அவர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அவரை போலீசார் சுற்றி வளைத்த போது கூட்டாளிகளுடன் பினு தப்பி ஓடிவிட்டார். அன்று முதல் மாதவனும் தனது கடையை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவர் கரூரில் இருப்பதை அறிந்த போலீசார், அங்கு அவரை கைது செய்து உள்ளனர்.

கைதான மாதவனிடம், பினு எங்கெல்லாம் தங்குவார்?, அவரது அன்றாட நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்பது உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் சில ஆண்டுகளாக அந்த அந்த பகுதியில் உள்ள ரவுடிகளுடன் பினு தொடர்பில் இருந்து வந்ததால் அந்த பகுதிகளிலும் முக்கிய ரவுடிகளின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து கொண்டு அவர்களில் சிலரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த நாள் விழாவின்போது பிடிபட்ட வாகனங்களை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு கார் தாம்பரம் பகுதியில் திருடப்பட்ட கார் என்பது தெரியவந்துள்ளதாகவும், மீதமுள்ள மோட்டார் சைக்கிள்களில் திருட்டு மோட்டார் சைக்கிள்கள் எத்தனை என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

செல்போனில் பதிவான முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்கள் குறித்து வைக்கப்பட்டு அவர்களிடமும் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்