சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்தது

சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் நோயாளிகள் அலறி யடித்து ஓடினார்கள்.;

Update: 2018-02-10 22:00 GMT
சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொமராபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. பொதுமருத்துவம், அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு என பிரிக்கப்பட்டு மொத்தம் 80 படுக்கை வசதிகள் உள்ளன.

சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக 4 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒரு அறையில் உள்ளது. அங்கிருந்து குழாய் வழியாக தேவைப்படும் நோயாளிகளின் அறைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது.

இந்தநிலையில் பிரசவ வார்டு அருகே செல்லும் ஆக்சிஜன் சிலிண்டர் குழாய் நேற்று காலை 10 மணி அளவில் ‘டமார்‘ என்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் நோயாளிகள் என்னவோ, ஏதோவென்று அலறியடித்து வெளியே ஓடினார்கள். குழந்தை பெற்ற பெண்கள் தங்களுடைய குழந்தைகளை கைகளில் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார்கள்.

உடனே ஆஸ்பத்திரி டாக்டர்களும், பணியாளர்களும் சத்தம் வந்த அறைக்கு ஓடிப்பார்த்தார்கள். குழாய் வெடித்து கியாஸ் வெளியேறுவதை கண்ட அவர்கள், உடனே குழாயின் அடைப்பை சரிசெய்தனர். பின்னர் அந்த குழாயுக்கு உரிய சிலிண்டரை பத்திரமாக எடுத்து ஆஸ்பத்திரிக்கு வெளியே கொண்டுவந்து போட்டார்கள். வெடித்தது ஆக்சிஜன் சிலிண்டர் என்பதால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சிலிண்டர் குழாய் எப்படி வெடித்தது? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்