மந்திராலயாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

விவசாயி, கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களை அடுத்து மந்திராலயாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-02-10 22:30 GMT
மும்பை,

மும்பை நரிமன்பாயிண்ட் பகுதியில் மாநில அரசின் தலைமை செயலகமான ‘மந்திராலயா’ கட்டிடம் அமைந்துள்ளது.  

இங்கு கடந்த மாதம் தர்மா பாட்டீல் என்ற 84 வயது விவசாயி வி‌ஷம் குடித்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை ஹர்‌ஷல் ராவ்தே என்ற ஆயுள் தண்டனை கைதி மந்திராலயாவின் 5–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதவிர கடந்த ஒரு மாதத்தில் மேலும் 2 தற்கொலை முயற்சி சம்பவங்களும் மந்திராலயா வளாகத்தை சுற்றிய பகுதியில் நடந்துள்ளது. இதையடுத்து மந்திராலயா ‘சூசைடு பாயின்டாக’ (தற்கொலை களம்) மாறி வருவதாக எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சம்பவங்களை அடுத்து மந்திராலயாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பிறகே மந்திராலயாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 7 மாடிகளை கொண்ட மந்திராலயாவின் ஒவ்வொரு தளத்திலும் பாதுகாப்பிற்கு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாடியில் உள்ள விளிம்பு பகுதிகளில் பொது மக்கள் உட்கார அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை செயலாளர் சுமித் முல்லிக் கூறும்போது, ‘‘பல்வேறு வழிகளில் பாதுகாப்பை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். டெல்லியை போன்று முன்அனுமதி பெற்றவர்களை மட்டும் மந்திராலயாவிற்குள் அனுமதிப்பது குறித்து யோசித்து வருகிறோம்.

இதேபோல குறைதீர்ப்பு மையங்களை மந்திராலயா கட்டிடத்திற்கு வெளியே வைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்’’ என்றார். 

மேலும் செய்திகள்