காட்டுமன்னார்கோவில் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

காட்டுமன்னார்கோவில் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-10 22:00 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மழுவத்தேரி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிநீர் செல்லும் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டதால் குடிநீர் தட்டுப்பாடு உருவானது.

இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலிகுடங்களுடன் வில்வகுளம் பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்