சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி வாலிபர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் 15 ஆயிரம் கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2018-02-10 22:15 GMT
மானாமதுரை,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் ஜவஹர் மார்க் பகுதியைச் சேர்ந்த சாந்திலால் மகன் பிரதீப்குமார் மிரட்வால்(வயது 30). வணிகவியல் பட்டதாரியான இவர் கடந்த 2013-ம் ஆண்டு ரெயிலில் ஏறியபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடது கால் பாதிக்கப்பட்டு, முழுங்காலுக்கு கீழே அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டது. தற்போது செயற்கை கால் மூலம் நடமாடி வந்த அவர் நாடு முழுவதும் இயற்கை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவர், நேற்று காலை மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை வழியாக மானாமதுரை வருகை தந்தார்.

இந்த சைக்கிள் பயணம் குறித்து பிரதீப்குமார் மிரட்வால் கூறும்போது, நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 100 கி.மீ. தூரம் பயணம் செய்வேன். கடந்த நவம்பர் மாதம் மத்தியபிரதேசத்தில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினேன். இதுவரை கேரளா, கோவா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் சென்றுவிட்டு தற்போது தமிழகம் வந்துள்ளேன்.

இதுவரை 5 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளேன். இனி ராமேசுவரம் சென்று கடலில் நீராடிய பின்னர் மீண்டும் பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். பெரும்பாலும் பயணத்தின் போது அதிகமாக சாப்பிடாமல் பழங்கள், காய்கறிகளை உண்டே பயணத்தை தொடர்கிறேன். பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும். சைக்கிள் பயணம் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் சைக்கிளிலேயே செல்ல உள்ளேன். இதன்மூலம் மொத்தம் 15 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

சாதாரணமாக 10 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்ட முடியாமல் கார், மோட்டார் சைக்கிள்களில் செல்லும் இளைஞர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளி வாலிபர் மனம் தளராமல் சைக்கிள் பயணம் செல்வதை பொதுமக்கள் பாராட்டினர். 

மேலும் செய்திகள்