கால்நடை பராமரிப்பு துறையில் காலிப்பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கால்நடை பராமரிப்பு துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Update: 2018-02-10 20:30 GMT
நெல்லை,

கால்நடை பராமரிப்பு துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

கால்நடை பராமரிப்பு உதவியாளர்


நெல்லை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் 62 கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கான கல்வி தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள், முன்னுரிமை பெற்றவர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரின் விகிதாசாரத்தை காலிப்பணியிடங்கள் உள்ளடக்கியதாகும்.

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 1–7–2015 அன்றைய தேதிப்படி 18 வயதாகும். அதிகபட்ச வயது அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு 35 வயதாகும். 10, பிளஸ்–2 தேர்வு பெற்றிருப்பின் அதிகபட்ச வயது 40 ஆகும். பட்டப்படிப்பு தேர்வு பெற்றிருப்பின் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகும். 10, பிளஸ்–2 தேர்வு பெற்றிருப்பின் அதிகபட்ச வயது 34 ஆகும். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆகும்.

23–ந் தேதி கடைசிநாள்

விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் www.tirunelveli.nic.in என்ற வலைதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட கலெக்டர் வளாகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி 627009 என்ற முகவரிக்கு வருகிற 23–ந் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படும். நேர்காணலில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்கள் இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிகளுக்கான நேர்காணல் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்