இந்தியாவின் மலாலா!
மேற்கு வங்காளத்தின் அனோயாரா கதுன் ‘இந்தியாவின் மலாலா’ என்று அழைக்கப்படுகிறார்.
பெண் குழந்தைகளின் உரிமை, கல்விக்காக குரல் கொடுத்து வரும், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் பெண், மலாலா யூசுப்சாய்.
அதேபோல பெண் குழந்தைக் கடத்தல், பால்ய வயது திருமணம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வருகிறார், மேற்கு வங்காளத்தின் அனோயாரா கதுன். அதனால்தான் இவர் ‘இந்தியாவின் மலாலா’ என்று அழைக்கப்படுகிறார்.
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்துக்கு உட்பட்ட சோட்டோ அஸ்காரா கிராமத்தைச் சேர்ந்த அனோயாராவுக்கு தற்போது 24 வயது. இவரும் 12 வயதில் டெல்லிக்கு கடத்திச் செல்லப்பட்டு, ஒரு வீட்டில் கொத்தடிமையாய் வேலை வாங்கப்பட்டார். ஆறு மாதங்களில் அங்கிருந்து தப்பி சொந்த ஊர் திரும்பிய அனோயாராவுக்கு, சேவ் தி சில்ரன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தொடர்பு கிடைத்தது. அதன்மூலம், ‘அஜ்கர் சூர்ஜா’ என்ற குழந்தைகளுக்கான செயல்பாட்டுக் குழுவில் இணைந்தார். விளிம்புநிலையில் உள்ள குழந்தைகளின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது இக்குழு.
“பள்ளியில் இருந்து இடைநின்றவர்களைக் கண்டு பிடித்து, மீண்டும் பள்ளியில் கொண்டுபோய் நாங்கள் சேர்க்கிறோம். இந்தக் குழுவில் ஓர் உறுப்பினராக இணைந்ததுடன் எனது பொறுப்பு முடிந்துவிடாது என்று உணர்ந்த நான், கிராமம் கிராமமாகச் சென்றேன், குழந்தைகளைத் திரட்டினேன். தற்போது எனக்கு, 1500 குழந்தைகள் கொண்ட 80 குழுக்களின் ஆதரவு இருக்கிறது” என்கிறார்.
இதுவரை, அனோயாரா மட்டுமே ஒரு தனி மனுஷியாக 135 குழந்தைக் கடத்தல் முயற்சிகளைத் தடுத்திருக் கிறார், கடத்தப்பட்ட குழந்தைகள் 180 பேரை அவர்கள் குடும்பத்துடன் மறுபடி சேர்த்திருக்கிறார், 50-க்கும் மேற்பட்ட பால்ய வயது திருமணங்களைத் தடுத்திருக் கிறார்.
கடந்த 2007-ம் ஆண்டு ஒரு மழை நாளில் தனது கிராமத்தில் சிறுமி ஒருவரை பொய்யான வாக்குறுதிகளின் பேரில் சிலர் வெளியூருக்கு அழைத்துச் செல்ல முற்படுவதை அனோயாரா அறிந்தார். அப்போது 14 வயதே ஆன அனோயாரா, அச்சிறுமியைக் காக்கப் புறப்பட்டார். அப்போது அவரது அம்மா தடுக்க, தன்னைப் போல பல சிறுமிகள் குறிப்பிட்ட பெண்ணுக்காகத் திரண்டிருப்பதைக் கூறிய அனோயாரா, “இன்று அச்சிறுமிக்கு நடப்பது நாளை எனக்கு நடக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?” என்று கேள்வி கேட்டார். அம்மா திகைத்து நிற்க, விடுவிடுவென்று போய் அந்தச் சிறுமிக்கு கவசமாய் நின்றுவிட்டார்.
இதுபோன்ற வயதையும் மீறிய துணிச்சலான செயல்பாடுகளால்தான் அனோயாரா கவனம் பெற்றிருக்கிறார். புகழ்பெற்ற ‘நாரி சக்தி விருதை’ப் பெற்ற மிகவும் இள வயதுப் பெண் இவர். கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் அவ்விருதை அனோயாரா பெற்றார். ஐ.நா. பொதுச் சபையில் இந்தியாவின் பிரதி நிதியாகவும் கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்.
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிற அனோயாரா, தனக்கு எனக் கிடைக்கும் சொற்ப நேரத்தில், கவிதை எழுதவும், இசை கேட்கவும் விரும்புகிறார்.
“குழந்தைகள் அச்சமில்லாமல் வாழும் ஓர் உலகை நான் கனவு காண்கிறேன். நாங்கள் எங்கள் உரிமைகளைப் பெறும், வறுமை காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படாத அற்புத உலகம் உருவாக வேண்டும்” என்று எதிர்பார்ப்பு குரலில் இழையோடக் கூறுகிறார், அனோயாரா கதுன்.
மேற்கு வங்கத்தின் தங்கப் பெண்!