குழந்தைக்குப் பெயர் வைக்கக் கட்டுப்பாடுகள்!
பிரான்சில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில்கூட பிரச்சினை ஏற்படுகிறது.
குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியான பிரெட்டன் மக்களுக்கும் பிரான்ஸ் அரசுக்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டுவருகிறது.
சமீபத்தில் ஒரு பிரெட்டன் தம்பதி தங்கள் குழந்தைக்கு ‘டெர்’சென்’ என்று பெயர் வைப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தடை விதித்தது. அந்தப் பெயரில் ஒரு மேற்கோள் குறி இருந்ததே அதற்குக் காரணம்.
அதை வன்மையாகக் கண்டித்துள்ள பிரெட்டன் அதிகாரிகள், இது பொறுத்துக்கொள்ள இயலாத மொழிப்பாகுபாடு என்று கூறியுள்ளனர்.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில்கூட ஏன் பிரச்சினை ஏற்படுகிறது?
காரணம், பிரான்சில் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன.
அதன்படி, பெயரின் முதல் பகுதி பிரெஞ்சு மொழிச் சொல்லாக இருக்க வேண்டும்.
பிரெஞ்சு மொழி மட்டுமே நிர்வாக மொழியாக இருக்கும் என்று 1794-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை மேற்கோள்காட்டி கடந்த 2014-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில், பெயரின் முதல் பகுதி கண்டிப்பாக பிரெஞ்சு மொழியில் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், மேற்கோள்குறி போன்றவற்றைப் பெயரில் பயன்படுத்தக் கூடாது. பெயரின் முதல் பகுதி, குழந்தையின் விருப்பத்துக்கு மாறாக இருக்கக்கூடாது.
1993-க்கு முன்பு வரை, பிரான்ஸ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் ஒன்று பயன்பாட்டில் இருந்தது. அதிலுள்ள பெயர்களில் ஒன்றைத்தான் சூட்ட வேண்டும்.
அதிபர் பிரான்காய்ஸ் மிட்டராண்ட் அந்த நடைமுறையை ஒழித்தார். அதனால், பெற்றோர்கள் வெளிநாட்டுப் பெயர்களையும் செல்லப் பெயர்களையும் வைத்துக்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது.
அதேபோல் முதல் விதிக்குட்பட்டு வழக்கத்தை விட்டு சற்று மாறுபடும் விதத்தில் பெயர் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் குழந்தையின் விருப்பத் துக்கு மாறான பெயராக அது இருக்கக் கூடாது.
இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், அந்தப் பெயர் அரசு ஆவணப் பதிவுகளிலிருந்து அகற்றப்படும்.
இந்த விதிதான் டிட்யூப், நூடெல்லா, ஸ்டிராபெர்ரி, ஜோயாக்ஸ் போன்ற பெயர்களை பிரான்ஸ் குழந்தைகளுக்குச் சூட்டமுடியாத நிலையை ஏற்படுத்தி யிருக்கிறது.
ஆக, பெயர் வைப்பது தொடர்பான பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கிறது!