பள்ளி மாணவியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு 30 ஆண்டு ஜெயில்

பள்ளி மாணவியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு 30 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வசாய் செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

Update: 2018-02-09 23:11 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் காமன் பகுதியை சேர்ந்த 12 வயது மாணவி ஒருத்தி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தாள். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, மாணவிக்கு அறிமுகமான ராகுல் கஜானன் (வயது24) என்ற வாலிபர் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தார்.

அவர் மாணவியை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி மோட்டார்சைக்கிளில் ஏற்றினார். ஆனால் மாணவியை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று கற்பழித்தார். பின்னர் மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வீசி விட்டு ஓடி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் கஜானனை கைது செய்து வசாய் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அவருக்கு எதிராக 21 பேர் சாட்சி அளித்தனர்.

மரபணு பரிசோதனை அறிக்கையின் மூலமும் அவர் தான் மாணவியை கற்பழித்து கொன்றது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளி ராகுல் கஜானனுக்கு 30 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்