பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்; உறவினர்கள் சாலை மறியல்

குளித்தலை அரசு மருத்துவமனையில் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-02-09 22:54 GMT
குளித்தலை,

கடவூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகள் சாந்தி(வயது 24) என்பவருக்கும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் குப்பணம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி(27) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு பின்னர் அதிக வேலை செய்யச்சொல்லியும், வரதட்சணை கேட்டும் சாந்தியை அவரது மாமியார், மாமனார் மற்றும் கணவர் துன்புறுத்தி மிரட்டிவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணி வீட்டின் அருகே இருந்த பயன்பாடில்லாத கிணற்றில் சாந்தி மூழ்கிய நிலையில் இறந்துகிடந்தார். இதையடுத்து குளித்தலை போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் சாந்தியின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 7 மாதங்கள் ஆனகாரணத்தால் இதுகுறித்து குளித்தலை கோட்டாட்சியர் விமல்ராஜ் விசாரணை மேற்கொள்ள இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தியின் உடல் நேற்று மதியம் 2 மணிக்கு மேலாகியும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சாந்தியின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஏற்படுவதாக கூறியும், குளித்தலை கோட்டாட்சியர் விமல்ராஜ் உடனடியாக விசாரணை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சமாதானமடைந்த சாந்தியின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் மருத்துவமனைக்குள் சென்ற அவர்கள் சாந்தியின் உடலை தாங்கள் வாங்க மாட்டோம் என்றும், அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சாந்தியின் உடலை அவர்களே கையெழுத்திட்டு பெற்றுக்கொள்ளவேண்டும் எனத்தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோட்டாட்சியர் விமல்ராஜ் மருத்துவமனைக்கு வந்து சாந்தியின் உடலை பார்வையிட்டார். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாந்தியின் தந்தை மற்றும் சகோதரர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதன் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்