நண்பர்கள்-அலுவலக ஊழியர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நண்பர்கள்-அலுவலக ஊழியர்கள் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.;

Update: 2018-02-09 22:30 GMT
திருச்சி,

முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர் தொழில் அதிபராக இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி காலை நடைபயிற்சிக்கு சென்றவர் அதன் பிறகு காணாமல் போனார். இந்த நிலையில் திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், காயங்களுடன் இறந்த நிலையில் அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி மர்ம மனிதர்கள் கடத்தி சென்று கொலை செய்து உடலை வீசி விட்டு சென்றதாக கருதி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் கொலையாளிகளை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசாரின் விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.

இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் சி.பி.ஐ.அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை தொடங்கினர். அதன்படி ராமஜெயம் நடைபயிற்சி சென்ற இடம், உடல் கிடந்த இடம் ஆகிய இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ராமஜெயத்தின் உறவினர்கள் பலரை சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அடுத்த கட்டமாக ராமஜெயத்தின் அரசியல் மற்றும் தொழில் நண்பர்கள், அலுவலக ஊழியர்களை விசாரணை வளையத்திற்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் கொண்டு வந்து உள்ளனர். இதனால் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்து உள்ளது.

மேலும் செய்திகள்