கடலில் வீசப்பட்ட ஆஞ்சநேயர் சிலை தலை துண்டான நிலையில் கிடந்ததால் பரபரப்பு

புதுவை கடலில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2018-02-09 22:45 GMT
புதுச்சேரி,

புதுவையில் இருந்து கப்பல்களில் கன்டெய்னர் மூலம் சரக்கு போக்குவரத்தை தொடங்குவதற்காக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் சரக்கு போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. முகத்துவார பகுதியில் மணல் சரிந்துவிடாத வகையில் தற்போது கருங்கற்கள் கொட்டப்பட்டுள்ளன.

இந்த கல் குவியலுக்கு இடையில் கல்லால் ஆன ஆஞ்ச நேயர் சிலை ஒன்று கிடந்தது. மண்டியிட்டு அமர்ந்தநிலையில் கும்பிடுவது போன்று அந்த ஆஞ்சநேயர் உள்ளது. சிலையின் தலைப்பகுதி துண்டிக்கப்பட்டு கிடந்தது. அதன் அருகில் சிலையின் உடல் பகுதி கிடந்தது. இந்த சிலையின் உயரம் 6 அடி இருக்கும். சிலையில் அதிக அளவில் பாசி படிந்து இருந்தது.

கடல் அரிப்பை தடுப்பதற்காக அந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருங்கற்கள் கொட்டப்பட்டன. அப்போது கொண்டு வரப்பட்ட கற்களுடன் அந்த சிலையும் அங்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக பகுதிகளில் இருந்துதான் அந்த கற்கள் புதுவைக்கு கொண்டுவரப்பட்டன. எனவே அங்குள்ள கல் குவாரிகளில் சிலையை வடிக்கும்போது சேதமடைந்து போய் இருக்க வேண்டும். எனவே அந்த சிலையை அப்படியேவிட்டு இருக்கலாம் என்றும் கழிவு கற்களை அப்புறப்படுத்தியபோது இந்த சிலையையும் ஏற்றி அனுப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது துறைமுக பகுதியில் தூர்வாரும் பணி நடப்பதால் கடலுக்குள் மூழ்கி கிடந்த இந்த சிலை வெளியே வந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சிலை நீண்ட நாட்களாக தண்ணீரில் மூழ்கி கிடந்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

புதுச்சேரி கடலில் சேதமடைந்த நிலையில் ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்டது திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்