பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டிய கும்பல்

பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தை ஒரு கும்பல் வீட்டை விட்டு விரட்டியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-09 21:30 GMT
புதுச்சேரி,

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் தியரி காக்னர் (வயது 66). புதுவை கிருஷ்ணாநகரில் தங்கி தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா சென்றார். அப்போது அங்கு வறுமையில் தவித்து வந்த ஒரு குடும்பத்தாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகளை புதுவைக்கு அழைத்து வந்தார். அவர்களை கிருஷ்ணாநகரில் தான் வசிக்கும் வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார்.

பின்னர் அந்த 4 குழந்தை களையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். அதில் 12 வயதுடைய மூத்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புதுவை குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தியரி காக்னரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர் போலீசார் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சிறுமியின் தாயார் மற்றும் 3 குழந்தைகளும் தங்கி இருந்த வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் வந்தது. அவர்கள் வீட்டில் இருந்த 4 பேரிடம் புகார் கொடுத்த சிறுமியை எங்கே என்று கேட்டு மிரட்டினர். பின்னர் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து விரட்டியடித்து வீட்டு கதவை பூட்டுபோட்டு பூட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் திடீரென்று எங்கே செல்வது என்பது தெரியாமல் தவித்தனர். வேறு வழியில்லாமல் கொட்டும் பனியில் கடுங்குளிரில் தவித்தபடி இரவு முழுவதும் அங்கு இருந்த கார்ஷெட்டில் அவர்கள் தங்கினர். இது பற்றிய தகவல் அறிந்து சமூக அமைப்புகளை சேர்ந்த சிலர் அங்கு சென்றனர். வீட்டின் பூட்டை உடைத்து அவர்களை அந்த வீட்டிலேயே தங்க வைத்தனர். இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்