கெடிலம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றம், பெண் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயற்சி

கடலூரில் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-09 22:30 GMT
கடலூர்,

கடலூர் அருகே உள்ள ஓட்டேரியில் இருந்து தேவனாம்பட்டினம் வரை 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு கெடிலம் ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்தும் பணி ரூ.22½ கோடி செலவில் பொதுப் பணித்துறை(நீர்வள ஆதாரம்) மூலம் நடைபெற்று வருகிறது.

கடலூர் புதுப்பாளையம் கெடிலம் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடிக்கும் பணி தாசில்தார் பாலமுருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலையில் நடைபெற்றது. இதையொட்டி தரைக்காத்த காளியம்மன் கோவிலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரைக்கும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வெங்கடேசன், உதயகுமார், ஆண்டவர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட 6 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்தனர்.

அப்போது கையில் கேனுடன் வந்த பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சரவணன் தீக்குளிப்பதற்காக தலையில் மண்எண்ணெயை ஊற்றினார். இதையடுத்து அருகில் நின்றுகொண்டிருந்த தனசேகர், ரமேஷ், விஜயா உள்பட 4 பேர், சரவணனின் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை வாங்கி தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து, தீக்குளிக்க முயன்றவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றினர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று பாரதிசாலை, புதுப்பாளையம் சாலை சந்திப்பில் உள்ள தரைக்காத்த காளியம்மன் கோவில் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில வாலிபர்கள் இடிக்காதே இடிக்காதே வீடுகளை இடிக்காதே என கோஷம் எழுப்பினர்.

இது பற்றி அறிந்ததும் அமைச்சர் எம்.சி.சம்பத், பேச்சுவார்த்தைக்கு கடலூர் சுற்றுலா மாளிகைக்கு வருமாறு போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து ஊர்வலமாக சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அங்கு 2-வது நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், சிலரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு செல்ல அனுமதித்தனர். மற்றவர்கள் நுழைவு பகுதியின் முன்பு தரையில் அமர்ந்து இருந்தனர்.

பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சப்-கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், தாசில்தார் பாலமுருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குர்ஷித்பேகம், சாரதி மற்றும் பொதுமக்கள் தரப்பில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாதவன், பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் சரவணன் நிருபர்களிடம் கூறும்போது, திருமாணிக்குழியில் மாற்று இடம் தருவதாக கூறினார்கள். அங்கு குடியேறினால் அடிப்படை வசதிகள் கிடைக்காது. 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகாலமாக கெடிலம் ஆற்றங்கரையோரம் வசித்து வருகிறோம். வீடுகள் பாதிக்காத வகையில் ஆற்றின் கரையை அமைத்து தரும்படி கூறினோம். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பின்னர் தெரிவிப்பதாக கூறினார்கள். நாங்கள் வசித்த இடத்திலேயே தொடர்ந்து குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்துசென்றனர். கடலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்