பெருந்துறையில் தி.மு.க. மண்டல மாநாடு நடைபெறும் இடத்தை துரைமுருகன் பார்வையிட்டார்

பெருந்துறையில் தி.மு.க. மண்டல மாநாடு நடைபெறும் இடத்தை துரைமுருகன் பார்வையிட்டார்.

Update: 2018-02-09 22:00 GMT
பெருந்துறை,

பெருந்துறையில் மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி மார்ச் 24 மற்றும் 25-ந் தேதிகளில் தி.மு.க. மண்டல மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மாநாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் நேற்று பெருந்துறை வந்து மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மாநாட்டின் தலைவர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், வரவேற்பு குழு தலைவர் முத்துசாமி ஆகியோர் துரைமுருகனை வரவேற்றார்கள். அப்போது மாநாட்டுக்கு நிதியாக ரூ.25 லட்சத்தை பொங்கலூர் பழனிச்சாமி துரைமுருகனிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நிதிக்குழு உறுப்பினருமான டி.ஆர்.எஸ்.சண்முகசுந்தரம் ரூ.10 லட்சமும், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி ரூ.10 லட்சமும் வழங்கினார்கள்.

அப்போது மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் சச்சிதானந்தம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் அந்தியூர் செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி ஆகியோர் உடன் இருந்தார்கள்.

முன்னதாக துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மு.க.ஸ்.டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மண்டல மாநாடு இது. மாநாட்டில் குறைந்த பட்சம் 10 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். மாநில மாநாடு போன்று பெருந்துறை மண்டல மாநாடு பிரம்மாண்டமாக இருக்கும். முதல் கட்டமாக இங்கு ரூ.45 லட்சம் மாநாட்டு நிதி பெறப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள அமைச்சர்களுக்கு துறை ரீதியான நிர்வாக அனுபவ திறமை எதுவும் கிடையாது. கட்டிங் ஆட்சி நடைபெறுகிறது. காவிரிநீரை பெற கர்நாடகம் சென்று கேட்போம் என்று இப்போது பிதற்றுவதில் பலன் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்