ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் ‘திடீர்’ உண்ணாவிரதம்; 17 பேர் கைது

அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி வேண்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ‘திடீர்’ உண்ணாவிரதம் இருந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-02-09 21:15 GMT
ஈரோடு,

ஈரோடு மாநகர் பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஆதித்தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு மக்கள் இயக்கத்தினர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ‘திடீர்’ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அறிவழகன், தமிழ்நாட்டு மக்கள் இயக்க மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கூறும்போது, ‘ஈரோடு மாநகர் பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி வேண்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான மனுக்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் தாளவாடி பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்வெட்டை புதுப்பித்து மார்பளவு சிலை வைக்க அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தோம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு ஈரோடு மாநகர் பகுதியில் சிலை வைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு போலீசார், ‘இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. எனவே நீங்கள் உடனடியாக இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர். எனினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து, சூரம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்படத்துக்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்