கொடைக்கானலில் போதை காளான் விற்ற ஓட்டல் ஊழியர் உள்பட 4 பேர் கைது

கொடைக்கானலில் போதை காளான் விற்ற ஓட்டல் ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-02-09 21:15 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் மலைப் பகுதியில் இயற்கையாக விளையும் ஒரு வகையான போதை காளானை மர்ம நபர்கள் பறித்து வந்து 300 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து மர்மநபர்கள் போதை காளான் களை விற்பனை செய்து வருகின்றனர்.இதை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் போதை தலைக்கேறுகிறது. இதை சாப்பிடுவதால் உடல் பாதிக்கப் படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், போதை காளான் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு ஓட்டலில் வேலைபார்க்கும் ஊழியரான புதுச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போதை காளான் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த ஜோஸ் விக்ரம் (22), அன்னை தெரசா நகரை சேர்ந்த ஜோஸ்வா (29), வட்டக்கானலை சேர்ந்த சஜீ (30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போதை காளான்களும், சுமார் 3 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்