மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-02-09 22:00 GMT
தேனி,

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.

தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உயர் கல்வி பயில துறை அனுமதிகோரி உரிய காலத்தில் விண்ணப்பித்தும், முன்அனுமதி வழங்கப்படாத நிலையில் உயர்கல்வி பயின்றவர்களுக்கு அரசாணையின்படி பின்னேற்பு ஆணைகள் வழங்க வேண்டும். பொது மாறுதலுக்கு பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு கடந்த காலங்களை போல் 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் இன்றைய தேவையை கருத்தில் கொண்டு இணையதள வசதியுடன் கணினி வழங்கி, அதை இயக்குவதற்கு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிராஜ் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெகநாதன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர், ஆசிரியைகள் தொடக்க கல்வி அலுவலகம் முன்பு அமர்ந்தே மதிய உணவு சாப்பிட்டனர். காலை 10 மணியளவில் தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது. 

மேலும் செய்திகள்