மதுரை அருகே, நான்கு வழிச்சாலையில் லாரி-கார் மோதல்; 3 பேர் பலி

மதுரை துவரிமான் அருகே நான்குவழிச்சாலையில் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து ரோட்டை கடந்து சென்று எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2018-02-09 21:45 GMT
செக்கானூரணி,

திருவாரூர் மாவட்டம், மருதபட்டினத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60). குன்னியூரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (42), ஆதமங்கலத்தைச் சேர்ந்தவர் சேவியர் (49), விஜயபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற சிவக்குமார் (36). இவர்களில் ராஜா லாரி வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்தநிலையில் லாரன்சுக்கு லாரி வாங்குவது சம்பந்தமாக 4 பேரும் ஒரு காரில் திருவாரூரிலிருந்து, நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ரங்கசாமி ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை துவரிமான் அருகில் உள்ள நான்கு வழிச்சாலையில் கார் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

அதேவேகத்தில் ரோட்டைவிட்டு கடந்து சென்ற கார், எதிர் திசையில் வந்த லாரி மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரங்கசாமி, லாரன்ஸ் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள். காரின் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்திருந்த சேவியர், ராஜா ஆகியோர் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் வழியிலேயே சேவியர் இறந்தார். ராஜா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்