தேனீ வளர்ப்பு மூலம் யானைகள் அட்டகாசத்தை தடுக்கலாம் முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் தகவல்

தேனீக்கள் வளர்ப்பு மூலம் யானைகள் அட்டகாசத்தை தடுக்கலாம் என்று முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறினார்.

Update: 2018-02-09 20:30 GMT
களக்காடு,

தேனீக்கள் வளர்ப்பு மூலம் யானைகள் அட்டகாசத்தை தடுக்கலாம் என்று முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறினார்.

பயிற்சி முகாம்

களக்காடு தலையணையில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு அகஸ்தியர் மலை நிலப்பரப்பு திட்டத்தின் கீழ் தேனீக்கள் வளர்ப்பு முறை பற்றிய பயிற்சி முகாம் நடந்தது. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ் தலைமை தாங்கினார். களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர், வனத்துறை துணை இயக் குனர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வனச்சரக அலுவலர்கள் புகழேந்தி, நடராஜன், அரும்புகள் அறக்கட்டளை மதிவாணன், பேராசிரியை ஜூலியட் வனிதாராணி மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனீக்கள் வளர்ப்பு முறை

அகஸ்தியர் மலை நிலப்பரப்பு திட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி முதல் குமுளி வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்களை பாதுகாக்க அந்தந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போது இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி மலையடிவார கிராம மக்களின் வளர்ச்சிக்கும், வனஉயிரினங்கள் பாதுகாப்புக்கும் பயன்படுத்தப்படும்.

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தேனி வளர்ப்பு மூலம் யானைகள் அட்டகாசத்தை தடுக்கலாம். எனவே விவசாயிகள் மூலம் மலையடிவாரத்தில் தேனீ வளர்ப்பு முறை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்