திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பெண் சாவு: பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள், நிதி உதவி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

புற்றுநோயால் தாய் இறந்ததால், பெற்றோரை இழந்து 3 குழந்தைகள் நிர்கதியாக நிற்கின்றனர். அவர்களுக்கு கல்வி-நிதி உதவி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2018-02-09 22:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி விஜயா (வயது 38). இவர்களுக்கு மோகன்ராஜ் (15), வேல்முருகன் (13) என்ற மகன்களும், காளஸ்வரி (10) என்ற மகளும் உள்ளனர். காளியப்பன் உடல்நலக்குறைவால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து விஜயா கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை பராமரித்து வந்தார்.

இந்தநிலையில் விஜயா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஏழ்மையின் காரணமாக நோய்க்கு சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். நோயின் தாக்கம் அதிகரிக்கவே அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மோகன்ராஜ், வேல்முருகன் ஆகியோர் தாயுடன் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி, சிகிச்சை பலனின்றி விஜயா இறந்தார்.

உறவினர்கள் யாரும் இல்லாததால் தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சிறுவர்கள் செய்வதறியாது மருத்துவமனையில் தவித்துள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பண உதவி செய்யுமாறு அழுதபடி தயங்கி, தயங்கி கேட்டுள்ளனர். சிறுவர்களின் நிலைமையை பார்த்த சில நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கு தங்களால் முடிந்த பண உதவியை செய்துள்ளனர்.

இதுகுறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வந்து சிறுவர்களின் நிலைமையை பார்த்தார். சிறுவர்களிடம் உடலை ஒப்படைக்க முடியாது என்பதால், கேரள மாநிலத்தில் கூலி வேலை பார்க்கும் காளியப்பனின் தம்பி முருகனுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். பின்னர் நேற்று முன்தினம் விஜயாவின் உடல் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் ஏழ்மை நிலையில் இருந்ததால், இலவச அமரர் வாகன வசதி செய்து கொடுத்தும் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அந்த பெண்ணின் உடலை தகனம் செய்யவும் ஏற்பாடு செய்தார். அதன்படி விஜயாவின் உடல் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த விஜயாவின் குழந்தைகளை, கேத்தாம்பட்டியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு முருகன் அழைத்து சென்றார். தானும் ஏழ்மையில் இருப்பதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லையே, என்று புலம்பியபடி அவர்களை அழைத்துச் சென்றார். சிறுவர்கள் தாயின் உடலை அடக்கம் செய்ய நோயாளிகளிடம் பண உதவி கேட்ட தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளை விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த விஜயா ஏதேனும் அரசு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் பதிவு செய்துள்ளாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் அவருடைய குழந்தைகளுக்கு உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் மற்றும் ஈமச்சடங்கு உதவியாக ரூ.2 ஆயித்து 500 ஆகியவை வழங்கப்படும்.

இல்லை என்றால் நலிந்தோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அவர்கள் எந்த வருமானமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உறவினர்களும் ஏழ்மையில் இருப்பதாக தெரியவந்தால் அவர்கள் ஆதரவற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் அந்த குழந்தைகளுக்கு வேறு வழியில் ஏதேனும் உதவி செய்ய வழிவகை இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்