ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்

கவிஞர் வைரமுத்துவை கண்டித்து 2-வது முறையாக உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

Update: 2018-02-09 22:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

கவிஞர் வைரமுத்து கடந்த மாதம் ராஜபாளையத்தில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாகவும், அந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், சில நாட்களுக்கு முன், மணவாள மாமுனிகள் மடத்துக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தார். பின்பு உண்ணாவிரதத்தை கைவிட்டு தமிழகம் முழுவதும் சென்று ஆன்மிகப் பெரியோர்களை சந்தித்து வந்தார்.

நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஜீயர் சடகோப ராமானுஜர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருடன் ஏராளமான பெண் பக்தர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று மன்னார்குடி ஜீயர், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் பலர் சடகோப ராமானுஜ ஜீயரை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

அதை ஏற்று, மாலை 4 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

மேலும் செய்திகள்