திருவள்ளூர், ரூ.20 லட்சம் மோசடி; ஒருவர் கைது

ரூ.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-09 23:15 GMT
திருவள்ளூர்,

சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவை சேர்ந்தவர் கோபால்ஜி அகர்வால் (வயது 50). இவர் வீட்டுமனையை வாங்க முடிவு செய்தார். இதை அறிந்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர் தனக்கு சொந்தமான அரசு அங்கீகாரம் பெற்ற 13 ஆயிரத்து 336 சதுர அடி மனைகள் மீஞ்சூரை அடுத்த நாலூரில் உள்ளது என்று கூறினார். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து கோபால்ஜி அகர்வால் கடந்த 2006-ம் ஆண்டில் அந்த மனைகளை தான் வாங்கிக் கொள்வதாக கூறி 3 தவணைகளாக ரூ.20 லட்சத்தை ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் தான் கூறியதை போல கோபால்ஜி அகர்வாலுக்கு மனைகளை கிரையம் செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்தார். பலமுறை கோபால்ஜி அகர்வால் கேட்டும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் மனையை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் இருந்து வந்தார்.

இதற்கிடையில் ஆறுமுகம் அந்த மனைகளை வேறு ஒருவருக்கு விற்க முயற்சி செய்தார். அவருக்கு உடந்தையாக மீஞ்சூரை சேர்ந்த நாகேஸ்வரராவ், வெங்கட் சுப்பிரமணியம், பிரகாஷ்சந்த் ஜெயின் ஆகியோரும் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கோபால்ஜி அகர்வால் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மனோகரன், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் போலீசார் நேற்று ஆறுமுகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நாகேஸ்வரராவ், வெங்கட் சுப்பிரமணியம், பிரகாஷ்சந்த் ஜெயின் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்