கடனை திருப்பி கேட்டவரை மிரட்டியவர் கைது

திருவள்ளூர் அருகே கடனை திருப்பி கேட்டவரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-09 23:00 GMT
திருவள்ளூர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பர்மா நகர், புதிய தேரடி தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரிடம் திருப்பாளைவனத்தை சேர்ந்த நண்பரான முத்துகுமார் (வயது 41) என்பவர் தனது சகோதரி மகளின் திருமணத்திற்காக ரூ.3 லட்சம் கடன் தருமாறு கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து கன்னியப்பன் தன்னுடன் பணிபுரியும் மகேந்திரன் என்பவரிடம் இருந்து கடந்த 25-8-2016 அன்று முத்துகுமாருக்கு பணத்தை கடனாக வாங்கி கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய முத்துகுமார் தான் கூறியதை போல மீண்டும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் கன்னியப்பன் முத்துகுமாரிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? என கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகுமார் தற்போது தன்னிடம் பணம் எதுவும் இல்லை. அதனால் பணம் கொடுக்கமுடியாது என கூறி கன்னியப்பனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கன்னியப்பன் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், ராஜேந்திரன், வீரமணிகண்டன், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று முன்தினம் முத்துகுமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்