மயில்களின் அட்டகாசம்
மயில்கள் ஓயாமல் கத்திக்கொண்டிருப்பதாகவும், சிலர் தோட்டத்தில் உள்ள பூக்களை பிய்த்துவிடுவதாகவும் புகார் கூறுகிறார்கள்.
இங்கிலாந்தின் மேலாண்ட் பகுதியில் வசிக்கும் பிரான்சஸ் ஒயிட் என்ற பாட்டி, 20 மயில்களை வளர்த்து வருகிறார். அவர் அந்த மயில்களை கூண்டுக்குள் அடைப்பதில்லை. அதனால் மயில்கள் கிராமம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன. மயில்கள் நடப்பதும், பறப்பதும், தோகையை விரித்து ஆடுவதும் என அழகழகான காட்சிகள் நம் கண்முன் வந்து சென்றாலும், அக்கிராமவாசிகள் மயில்களை சுதந்திரமாக வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித் திருக்கிறார்கள். அட கொடுமையே! என்று மீதி கதையை கேட்டால்... மயில்கள் ஓயாமல் கத்திக்கொண்டிருப்பதாகவும், சிலர் தோட்டத்தில் உள்ள பூக்களை பிய்த்துவிடுவதாகவும் புகார் கூறுகிறார்கள். இன்னும் சிலர், வீட்டுக் கூரையில் ஏறி அசுத்தம் செய்வதாகச் சொல்கிறார்கள். இந்த விஷயம் கிராம நிர்வாகம் வரை செல்ல பிரான்சஸ்ஸுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
“நான் கடந்த 20 ஆண்டுகளாக பறவைகளை வளர்த்து வருகிறேன். 2 ஜோடி மயில்களைத்தான் முதலில் வளர்க்க ஆரம்பித்தேன். இன்று 20 மயில்கள் என்னிடம் இருக்கின்றன. உலகளவில் அரிய இனமாக மாறிவரும் மயில்களை வளர்ப்பதற்காக என்னை பாராட்டவில்லை என்றாலும், என்னை சர்ச்சையில் சிக்கிவிடாமல் இருங்கள்” என்று வருந்துகிறார், பிரான்சஸ்.