திரிகடுகம் என்னும் மூவா மருந்து
மனித உடலில் உள்ள நோய்களை போக்க விஞ்ஞானம் கூடிய இயற்கை முறைகளில் நல்ல மருந்தாக உள்ளது.
திரிகடுகம் என்னும் வைத்திய நூலானது மூவா மருந்து என்னும் சுக்கு, மிளகு, திப்பிலி பற்றி குறிப்பிடும் மருத்துவ நூலாகும். இதில் சுக்கு, மிளகு, திப்பிலி என்பதற்கு கூட கிரக ஆதிக்கம் உள்ளது. அதன்படி,
சுக்கு - அதிபதி குரு
மிளகு - அதிபதி செவ்வாய்
திப்பிலி - அதிபதி புதன்
இதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.
சுக்கு
உலர்ந்த இஞ்சி தான் சுக்காக மாறுகிறது. இஞ்சியின் சாறு அனைத்தும் உலர்ந்து போனதால் இவற்றில் சக்தி அதிகமாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நமது உடலின் ஜீரண உறுப்புகளுக்கு ஏற்ற அருமருந்தாகும். செரிமானம் செய்யக்கூடிய உணவுகளில் கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், கிளிசரால் போன்ற மூலக்கூறுகளாக மாற்றும் வேதி நிகழ்வு தான் இந்த செரிமானம் என்பதாகும். திடமான உணவுகளை கூட எளிதாக மாற்றக்கூடிய சக்தி நார்ச்சத்து உள்ள காய், கிழங்கு, கீரை வகைகளுக்கு உண்டு. இதில் அதிக சக்தி பெற்றது சுக்கு. இதற்கு உரியவர் குரு பகவான்.
மிளகு
இந்தியாவின் கருப்பு வைரம் என்று வர்ணிக்கப்படும் பொருள் மிளகு. இவை மலைகளில் கொடி போல் படர்ந்து வளரக்கூடிய அதிக மருத்துவ குணம் கொண்டது. சற்று காரமாக இருந்தாலும், இதன் மருத்துவ பயன்கள் அதிகம். நுரையீரலில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடியவை. சளிக்கும், ரத்த போக்கை நீக்குவதற்கும், கெட்ட கொழுப்பை கரைப்பதற்கும், குடல் புழுக்கள் நீங்குவதற்கும், விஷக்கடிகள் முறிவு செய்யவும், ரத்தத்தை சுத்தம் செய்யவும் இவை உதவும். இதற்கு உரியவர் செவ்வாய் கிரகமாகும்.
திப்பிலி
சுக்கு-மிளகு என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திப்பிலி என்றால் பலருக்கு தெரியாது. திப்பிலி என்பது கோது என்பவையாகும். கோது என்றால் சூரணம் போன்ற பொடி வகையைச் சேர்ந்ததாகும். திப்பிலி என்பது ஒரு பொருளை குறிப்பிடும் சொல் அல்ல. மர சக்கை, பழத்தின் மேல் தோல், இலைச் சருகு, மரப்பட்டை, செடி கொடியின் வேர்கள் போன்ற மூலிகை அம்சங்களை கொண்டவை தான் திப்பிலி. இவை நோய் தன்மைக்கு ஏற்றவாறு பல மூலப்பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மருந்தாகும். இவை உடலில் மேல் பூசப் படுவதற்கும், உடல் உள்ளே சாப்பிடுவதற்கும் ஏற்ற மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இந்த திப்பிலிக்கு உரியவர் புதன்.
சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் கொண்டு மருத்துவம் செய்யப்படுகிறது. பழங்கால மருத்துவ வகையில் இவையும் ஒன்று. தற்போது மலைவாழ் மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றாலும், சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் தயாரிக்க இவற்றைப் பயன்படுத்திக் கொள் கிறார்கள்.
மனோவசிய மருத்துவம்:
நமது மனதை திடப்படுத்தி ஒரு நிலைப்படுத்தி செய்யக்கூடிய மருத்துவம், ‘மனோவசிய மருத்துவம்’. இதற்கு சந்திரனே காரணமாக இருக்கிறார்.
மனதில் பயம் கொண்டவர்களுக்கு தைரியத்தை அளிப்பதற்காக யந்திரம் மந்திரித்துத் தருவதைப் பார்த்திருக்கலாம். இதுவும் ஒருவகை மருத்துவமே. பித்து பிடித்த மன நிலையில் இருப்பவர்களுக்கு இவ் வகையான மருத்துவம் செய்யப்படுகிறது. இவற்றுக்கு காரணமானவர் சுக்ரன்.
தமிழ் வேதங்களான தேவாரம், திருவாசகம் போன்ற வேத வார்த்தைகளை பயன்படுத்தி, திருநீறு மந்திரித்து தருவது ஒருவகை வைத்தியம் ஆகும். இதன் மூலம் உடல் வலிகள் மன தைரியம், நம்பிக்கை மூலம் பல நோய்கள் குணம் அடைய செய்வார்கள். இவற்றுக்கு எல்லாம் குருவே காரணமாக இருக்கிறார்.
நமது உடல் பயிற்சிகள் மூலம் எவ்விதமான நோய்கள் வராமல் பாதுகாக்க யோகாசனம் பெரும் உதவி செய்கிறது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் ஒருவகை வைத்திய கலை இதுவாகும். இதற்கு சூரியன் காரணமாக இருக்கிறார்.
தியானம் மூலமும் பல நோய்கள் வராமல் தடுக்க முடியும். நோய் இன்றி நூறு வருடம் வாழும் கலையை கற்றுத் தருகிறது. இவற்றுக்கு புதன் காரணமாக இருக்கிறார்.
பிராணாயாமம் என்ற ஒரு வகை மருத்துவ முறை இருக்கிறது. இது நமது மூச்சு விடும் காற்று அளவுகளில் சுவாசத்தை அடக்கியாளும் யோக முறையாகும். இந்த மூச்சு பயிற்சியின் மூலமும் நோய் தடுப்பு செய்ய முடியும். இவற்றுக்கும் காரணம் புதனே ஆகும்.
வேப்பிலை அடித்து பாடம் போடுதல்:
வேப்பிலை அடித்து பாடம் போடுவது என்ற ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அது மருத்துவம் என்று சொல்வதை விட, மனிதர்களின் நம்பிக்கை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இதற்கு உரியவர் சனி பகவான்.
இந்தியாவில் மட்டும் தான் மனிதனின் நம்பிக்கை என்ற அடிப்படையில் பல வகையான மருத்துவ முறைகள் உள்ளன. எல்லா வைத்திய முறைகளுக்கும் விஞ்ஞான ஆதாரம் காட்டுவது என்பது குறைவு என்றாலும், நோய் போக்குவதற்கு எளிய வைத்திய முறைகள் நிறைய உள்ளன.
நாம் பல விரத நாட்களில் அமாவாசை தினங்களில் கடலில் போய் குளிக்கிறோம். அவ்வாறு கடலில் குளிக்கும் போது கடல் நீர் உப்பு தன்மையாக இருந்தாலும் நமது உடலில் உள்ள சொரி, சிரங்கு, தேம்பல், மேக நோய், மர்ம உறுப்பில் உள்ள தோல் நோய்கள், அக்குகள் உள் தோல் நோய்கள், தலையில் பொடுகு, புண்கள் உடனே சரியாகும். கடல் நீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது என்பதை விஞ்ஞானம் கூட ஒப்புக் கொள்கிறது.
மனித உடலில் உள்ள நோய்களை போக்க விஞ்ஞானம் கூடிய இயற்கை முறைகளில் நல்ல மருந்தாக உள்ளது. என்ன தான் இயற்கை முறையில் மருத்துவம் ஆயிரம் இருந்தாலும் விஞ்ஞான அடிப்படையில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை முறைகளில் ஈடு இணை எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியே காட்டுகிறது. இவற்றுக்கெல்லாம் ஒரு அடிப்படை ஜோதிடம் காரணமாக உள்ளது. மேலும் நம்மை அறியாமல் எங்கும் எதிலும் ஜோதிடம் நுழைந்து அதன் பணியை சரிவர செய்கிறது.
பொதுவாக மகர கும்ப ராசிகளில் செவ்வாய் நின்று இருந்தாலே நமது உடலில் ஒரு சின்ன தையல் போட வேண்டி வரும். அதேபோல் சனி செவ்வாய் சேர்க்கை அல்லது பார்வை இருந்தாலே உடலை கிழித்து தையல் போட்டு ஒட்டு போட வேண்டி இருக்கும். இவையாவும் ஜோதிட ரீதியாக அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.
-ஆர்.சூரியநாராயணமூர்த்தி.