ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல்

ஆலந்தூர் மற்றும் பெரம்பூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-09 00:14 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் எம்.கே.என்.சாலை, ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ.காலனி, பிருந்தாவன் நகர் போன்ற பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் முன்பு சாலையை ஆக்கிரமித்து அலங்கார முகப்புகள், பெயர் பலகைகள், இரும்பு மேற்கூரைகள், மழைநீர் கால்வாய் மற்றும் நடைபாதை மீது படிக்கட்டுகள், சறுக்குகள் அமைத்து உள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆனந்தராஜ் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்று பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் ஆலந்தூர் எம்.கே.என்.சாலையில் உள்ள 5 கடைகளின் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த இரும்பு மேற்கூரைகள் மற்றும் பெயர் பலகைகளை அகற்றினார்கள்.

அப்போது அங்கு வந்த ஆலந்தூர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் முன் அறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது. ஆக்கிரமிப்புகளை நாங்களே அகற்ற காலஅவகாசம் தரும்படி கேட்டனர்.

அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுத்ததால் வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எம்.கே.என்.சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர், அந்த பகுதியில் சாலை முழுவதும் ஆய்வு செய்து விட்டு, சாலையின் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் 2 நாளில் அவற்றை அகற்றவேண்டும் என்றார்.

இதையடுத்து கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, அகற்ற வேண்டிய இடங்கள் குறித்து வியாபாரிகளுக்கு தெரிவித்தனர். ஆனால் தங்களுக்கு காலஅவகாசம் போதவில்லை என்று கூறி வியாபாரிகள் திடீரென எம்.கே.என்.சாலையில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் எம்.எல்.ஏ. அன்பரசன் அங்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து வருகிற 12-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகள் காலஅவகாசம் அளித்தனர்.

இதற்கிடையில் ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ.காலனி, பிருந்தாவன் நகர் பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளின் முன் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதேபோல் சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் 6-வது மண்டல அதிகாரி அருணா உத்தரவின்பேரில் செயற்பொறியாளர்கள் சரோஜா, செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர்கள் சரஸ்வதி, சரவணன், கோபிநாத் மற்றும் பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் பெரம்பூரில் மாதவரம் நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் புளியந்தோப்பு துணை கமிஷனர் சியாமளாதேவி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள், வியாபாரிகளுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்பட்டு, 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்தனர். அதை ஏற்று வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்