மின்சார ரெயில் சேவை மூலம் ரூ.2 கோடி கூடுதல் வருவாய்

பஸ் கட்டண உயர்வால் சென்னையில் மின்சார ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன்காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

Update: 2018-02-09 00:09 GMT
சென்னை,

தமிழக அரசு கடந்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. சில வழித்தடங்களில் பஸ் கட்டணம் இருமடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையை பொறுத்தவரை பஸ் போக்குவரத்து மாற்றாக மின்சார ரெயில் சேவையை மக்கள் அதிகஅளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

குறைவான கட்டணம் காரணமாக மின்சார ரெயில்களில் ஏற்கனவே காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வு காரணமாக மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் ரெயில்வேக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில், கடந்த ஆண்டு (2017) ஜனவரி 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 68 லட்சத்து 86 ஆயிரத்து 743 பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.12 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 473 வருவாய் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜனவரி 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 73 லட்சத்து 93 ஆயிரத்து 154 பயணிகள் மூலம், ரெயில்வேக்கு ரூ.14 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 75 வருவாய் கிடைத்து உள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் (மேலே குறிப்பிட்ட நாட்களில்) 5 லட்சத்து 6 ஆயிரத்து 411 பயணிகள் கூடுதலாக மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதன்மூலம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 35 ஆயிரத்து 602 கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் ‘சீசன்’ டிக்கெட்டில் பயணிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு ஜனவரி 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 63 லட்சத்து 65 ஆயிரத்து 250 பேர் பயணம் செய்தனர். அதன்மூலம் ரூ.2 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரத்து 670 வருவாய் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டில் 69 லட்சத்து 89 ஆயிரத்து 950 பயணிகள் மூலம், ரூ.2 கோடியே 53 லட்சத்து 63 ஆயிரத்து 656 வருவாய் கிடைத்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் 6 லட்சத்து 24 ஆயிரத்து 700 பேர் கூடுதலாக பயணித்ததில், ரெயில்வேக்கு ரூ.21 லட்சத்து 44 ஆயிரத்து 986 கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

ஆக மொத்தம் கடந்த ஆண்டை காட்டிலும் 11 லட்சத்து 31 ஆயிரத்து 111 பயணிகள் மின்சார ரெயில்களில் கூடுதலாக பயணித்து உள்ளனர். இதன்மூலம் ரூ.2 கோடியே 14 லட்சத்து 80 ஆயிரத்து 588 கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்