‘பக்கோடா’ விவகாரம்: ‘முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது’ சிவசேனா விமர்சனம்

பக்கோடா விவகாரத்தை கிளப்பி, முக்கிய பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை மத்திய அரசு திசை திருப்புவதாக சிவசேனா விமர்சித்தது.;

Update: 2018-02-08 22:15 GMT
மும்பை, பிப்.9-

பக்கோடா விவகாரத்தை கிளப்பி, முக்கிய பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை மத்திய அரசு திசை திருப்புவதாக சிவசேனா விமர்சித்தது.

மோடி, அமித்ஷா கருத்து

பக்கோடா விற்பனை செய்வதும் ஒரு விதத்தில் வேலைவாய்ப்பு தான் என்றும், இதனையும் வேலைவாய்ப்பு உருவாக்கும் விதத்தில் தான் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கு மத்தியில், பக்கோடா பிரச்சினை குறித்து டெல்லி மேல்-சபையில் பேசிய பா.ஜனதா தலைவர் அமித்ஷா, வேலையில்லாமல் இருப்பதை காட்டிலும், பக்கோடா விற்பனை செய்வது சிறந்தது என்று கருத்து தெரிவித்தார்.

இந்திரா காந்தியின் துணிச்சல்


அவர்களது இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட காங்கிரசுக்கு தைரியம் இல்லை. இருப்பினும், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானை தோற்கடித்து அந்நாட்டை பிளவுபடுத்தினார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்த போதிலும், தன்னுடைய துணிச்சலை இந்திராகாந்தி வெளிப்படுத்தினார்.

இன்றைக்கு அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பிரதமர் மோடியின் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவதாகவும், சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் பரவலாக பேசப்படுகிறது.

டெல்லி மகிழ்ச்சி


பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியுதவிக்கு எதிராக அமெரிக்கா பேசியபோது, டெல்லி மகிழ்ச்சி அடைந்தது. அதேவேளையில், பாகிஸ்தானும், அந்நாட்டு பயங்கரவாதிகளும் ஒவ்வொரு நாளும் இந்தியாவுக்கு சிரமம் அளித்து வருகின்றனர். முக்கிய பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக கற்பனையான பக்கோடாக்கள் தயார் செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்