திண்டுக்கல் நகரில் ஒரே ஆண்டில் 1,809 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து

திண்டுக்கல் நகரில் ஒரே ஆண்டில் சாலை விதிகளை மீறிய 1,809 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update: 2018-02-08 22:30 GMT
திண்டுக்கல்,


திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் விபத்து பகுதிகளை கண்டறிந்து தடுப்புகள் அமைத்தும், ஒருவழிப்பாதையாக மாற்றியும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெரும்பாலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் தான் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகிறது.

எனவே, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போக்குவரத்து போலீசார், உள்ளூர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனை செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதில் ஓட்டுனர் உரிமங்களை பறிமுதல் செய்து, தற்காலிக ரத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.


இதில் திண்டுக்கல் நகர் போக்குவரத்து போலீசார் நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். அப்போது சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி கடந்த ஓராண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 164 பேரின் உரிமங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதவிர ஹெல்மெட் அணியாதது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லுதல் ஆகிய குற்றங்களுக்காக 1,645 பேரின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர். இந்த உரிமங்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து 3 மாதங்களுக்கு தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் நகரில் கடந்த ஓராண்டில் மட்டும் 1,809 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்