தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தோல்வியில் முடிந்தது.

Update: 2018-02-08 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் துணிகளை தயாரித்து கொடுத்து வருகின்றனர். அதற்கான கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறியாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே செய்யப்பட்டுள்ள கூலி உயர்வு ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கூலியை உயர்த்தி வழங்கும் படி விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி சோமனூர் ரகத்திற்கு 30 சதவீதமும், இதர ரகங்களுக்கு 27 சதவீதமும் சம்பளம் அதிகப்படுத்தி கடந்த 2014-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் 6 மாத காலம் மட்டுமே இந்த கூலியை வழங்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு காரணங்களை காட்டி உயர்த்தி வழங்கப்பட்ட கூலியை ரத்து செய்தனர். இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதும் 3 மாதங்கள் மட்டுமே ஒப்பந்தபடி கூலி வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பின்னர் உயர்த்தப்பட்ட கூலி மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினருக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி அமுதா தலைமை தாங்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பல்வேறு கட்டங்களாக தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினரிடையேயும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) கோவையில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், இதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று விசைத்தறியாளர்கள் தெரிவித்திருந்தனர். 

மேலும் செய்திகள்