சரக்கு போக்குவரத்து பணிக்காக புதுவை துறைமுகத்தில் அடுத்தவாரம் வெள்ளோட்டம்

புதுவை துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்குவதற்கான வெள்ளோட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என்று தெரிகிறது.

Update: 2018-02-08 22:45 GMT
புதுச்சேரி,

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு வசதியாக புதுவை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் மூலம் சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்னை துறைமுகம் முன்வந்துள்ளது. இதற்காக புதுவை அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதுவை துறைமுகம் சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக செயல்பட உள்ளது.

இதையொட்டி மத்திய அரசின் நிறுவனம் மற்றும் காரைக்கால் மார்க் துறைமுக நிறுவனம் மூலமாக புதுச்சேரி துறைமுக பகுதியை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி வரும் கப்பல் (பார்ஜி) வரும் பாதையில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக மிகப்பெரிய படகு ஒன்றில் பொக்லைன் எந்திரம் ஏற்றப்பட்டு அதன் மூலம் தூர்வாரி கழிவுகளை படகில் கொட்டி அதை கரையில் கொண்டு வந்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதையொட்டி சரக்கு போக்குவரத்துக்கான வெள்ளோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த பணி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் இந்த வெள்ளோட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்