ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி மாயாவதி கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இதில் ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே முதல் கூட்டணி உருவாகி உள்ளது.

Update: 2018-02-08 21:30 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இதில் ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே முதல் கூட்டணி உருவாகி உள்ளது. கூட்டணியில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் சூடுபிடிக்கிறது

தேர்தலை சந்திப்பதற்காக தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரசும், ஆட்சியை பிடிப்பதற்கு பா.ஜனதாவும் தனது பலத்தை நிரூபிக்க ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஏற்கனவே வியூகங்களை அமைத்து பணிகளை தொடங்கி விட்டன. அதோடு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி கர்நாடகம் வந்து முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கி வைத்துவிட்டு சென்று உள்ளனர்.

அடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகம் வர இருக்கிறார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான ஜனதா தளம்(எஸ்) கட்சியும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான முதல் கூட்டணியை அமைத்துள்ளன. இதன் மூலம் கர்நாடக சட்டசபை தேர்தல் சூடுபிடித்து உள்ளது.

கூட்டணி அறிவிப்பு

ஜனதா தளம்(எஸ்)-பகுஜன்சமாஜ் கட்சிகள் இடையேயான கூட்டணி அறிவிப்பு டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த கூட்டணி முடிவு எடுக்கப்பட்ட பிறகு ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய பொதுச் செயலாளர் டேனிஷ் அலி, பகுஜன் சமாஜ் தேசிய பொதுச் செயலாளர் சதீஸ்சந்திர மிஸ்ரா ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்), பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

20 தொகுதிகள் ஒதுக்கீடு

பகுஜன் சமாஜ் கட்சிக்கு 14 மாவட்டங்களில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எல்லா தொகுதிகளிலும் இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக சேர்ந்து பிரசாரம் செய்வார்கள். மாயாவதியும், தேவேகவுடாவும் இணைந்து ஒரே மேடையில் மக்களிடம் பேசுவார்கள். இந்த கூட்டணியால் கர்நாடகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

கர்நாடகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். ஜனதா தளம்(எஸ்) கட்சியின் நிலைப்பாடுகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பில் வருகிற 17-ந் தேதி பிரசார பொதுக்கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

ஆனேக்கல்- கொள்ளேகால்


1. சாம்ராஜ்நகர் மாவட்டம் - கொள்ளேகால், சாம்ராஜ்நகர், குண்டலுபேட்டை

2. பெங்களூரு நகர மாவட்டம் - ஆனேக்கல்

3. பெலகாவி மாவட்டம் - நிப்பானி, சிக்கோடி, ராஜ்பாக்

4. தாவணகெரே மாவட்டம் - ஒன்னாளி

5. பீதர் மாவட்டம் - பீதர் வடக்கு

6. கலபுரகி மாவட்டம் - சித்தாப்பூர், கலபுரகி புறநகர்

7. பல்லாரி மாவட்டம் - விஜயநகர்

சுள்ளியா-கதக் நகரம்

8. பாகல்கோட்டை மாவட்டம் - பாகல்கோட்டை நகரம்

9. உடுப்பி மாவட்டம் - கார்கலா

10. உப்பள்ளி-தார்வார் மாவட்டம் - உப்பள்ளி-தார்வார் கிழக்கு

11. ஹாவேரி மாவட்டம் - பேடகி

12. கதக் மாவட்டம் - சிரஹட்டி, கதக் நகரம்

13. விஜயாப்புரா மாவட்டம் - பபலேஸ்வர்

14. தட்சிண கன்னடா மாவட்டம் - சுள்ளியா

தலித்துகளின் வாக்குகளை கவரும்...

ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு மாநிலத்தின் தென் மாவட்டங்களில் தான் அதிக செல்வாக்கு உள்ளது. ஆனால் வட மாவட்டங்களில் அந்த கட்சியின் பலம் குறைவாகவே இருக்கிறது. கர்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள தலித்துகளின் வாக்குகளை கவரும் நோக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இரு மதசார்பற்ற கட்சிகளும் கூட்டணி அமைத்து இருப்பது காங்கிரசுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்