ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நேரு எம்.எல்.ஏ.விடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நேரு எம்.எல்.ஏ.விடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.;

Update: 2018-02-08 23:00 GMT
திருச்சி,

முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேருவின் தம்பி தொழில்அதிபர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி காலை நடைபயிற்சிக்கு சென்றபோது திடீரென காணாமல் போனார்.

இந்நிலையில் அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் அவரை கடத்தி கொண்டுபோய் கொலை செய்து, உடலை அங்கு வீசி விட்டு சென்றதாக கருதி ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலைக்கான உண்மையான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசாராலும் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், ராமஜெயத்தின் மனைவி லதா இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உத்தரவிடவேண்டும் என கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் குற்றவாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர். ஆனால் பல முறை அவகாசம் வழங்கியும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் ராமஜெயம் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. போலீசாரில் ஒரு பிரிவினர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி வந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

மேலும் ராமஜெயம் உடல் கிடந்த இடத்திற்கும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்தனர். அதன்பின்னர் இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர்கள் என்ற அடிப்படையில் ராமஜெயத்தின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி தகவல்கள் பெறுவதற்காக சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரு எம்.எல்.ஏ. மற்றும் ராமஜெயத்தின் மனைவி லதா ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தினார்கள். திருச்சியில் இந்த விசாரணை நடந்தது. சி.பி.ஐ. விசாரணை தொடங்கியதை தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடித்து உள்ளது.

ராமஜெயம் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்களை தொடர்ந்து, சி.பி.ஐ. போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அதிரடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் செய்திகள்