ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்: வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம்

ஆந்திராவில் மத்திய அரசை கண்டித்து நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.;

Update:2018-02-09 04:15 IST
வேலூர்,

பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு சிறப்பு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்தும், சிறப்பு நிதியை ஒதுக்கக்கோரியும் ஆந்திராவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு பொதுநல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் ஆந்திராவில் ஏராளமான கடைகள், ஓட்டல்கள், வணிகவளாகங்கள், நிதி நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

ஆந்திராவில் நடைபெற்ற போராட்டம் காரணமாக வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சித்தூர், திருப்பதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. அதேபோல் ஆந்திராவில் இருந்து வேலூருக்கு அரசு பஸ்களும் வரவில்லை. வேலூரில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போராட்டம் குறித்து தகவல் அறியாமல் திருப்பதி, சித்தூர் மற்றும் ஆந்திராவுக்கு செல்ல வேலூருக்கு வந்த பயணிகள் பஸ்கள் இல்லாமல் அவதியடைந்தனர். பின்னர் அவர்கள் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து ரெயில் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழக-ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு, பத்தலப்பல்லி, பரதராமி ஆகிய பகுதிகளில் கார், லாரி உள்பட வாகனங்கள் வரிசையாக நின்றன. 

மேலும் செய்திகள்