ரெயில்வே தொழிலாளர்கள் இடையே அடிதடி

ரெயில்வே தொழிலாளர்கள் இடையே அடிதடி வடமாநில ஊழியர்கள் வேலையை புறக்கணித்து சென்றனர்

Update: 2018-02-08 22:30 GMT
ஆம்பூர்,

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் ரெயில் நிலைய பகுதியில் ரெயில்வே இருப்புப்பாதையில் நேற்று முன்தினம் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தண்டவாள இணைப்பை ‘வெல்டிங்’ செய்யும் பணியில் ஈடுபட்டனர். வட மாநில ஊழியர்களுடன் ஆம்பூர் புதுமனை பிலால் நகர் பகுதியை சேர்ந்த முகமது பஷீர் (30) என்பவரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிந்தார்.

அப்போது இளநிலை பொறியாளர் கோவிந்தன் என்பவர் வடமாநில தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணி குறித்து மொழி பெயர்த்து அவர்களுக்கு சொல்லுமாறு முகமதுபஷீரிடம் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து இளநிலை பொறியாளர் கூறியதை, முகமதுபஷீர் மொழி பெயர்த்து வடமாநில ஊழியரான சோட்டு குமாரிடம் கூறினார். அப்போது அவர் “நீ என்ன அதிகாரியா? எங்களுக்கு வேலை சொல்ல” என அவர்களது மொழியில் கூறி தகராறில் ஈடுபட்டார். அப்போது 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து சதர்ன் ரெயில்வே மஸ்தூர் தொழிற்சங்க சென்னை கோட்ட உதவி செயலாளர் லியோ தலைமையிலான நிர்வாகிகள் நேற்று காலை இரு தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வடமாநில ஊழியர்கள் அதனை புறக்கணித்து விட்டனர். தொடர்ந்து ஜோலார்பேட்டை முதல் ஆம்பூர் வரை பணிபுரியும் 40-க்கும் மேற்பட்ட வடமாநில ஊழியர்கள் நேற்று வேலையை புறக்கணித்து சென்னைக்கு தென்னக ரெயில்வே மேலாளரை சந்திக்க சென்றனர்.

மேலும் செய்திகள்