காற்றாலை மோசடி வழக்கில் பிடிவாரண்டு: கோவை கோர்ட்டில் சரிதாநாயர் சரண்

காற்றாலை மோசடி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை கோர்ட்டில் சரிதாநாயர் நேற்று சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளிவைத்தார்.

Update: 2018-02-08 23:15 GMT
கோவை,

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரிதாநாயர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளியில் நிறுவனம் ஒன்றின் மூலம் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் மற்றும் சிலரிடம் ரூ.38 லட்சம் பணம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் சரிதா நாயர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை 6-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன்பு 3 முறை நடந்த விசாரணைக்கு சரிதாநாயர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி சரிதா நாயருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு ராஜவேலு உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதன்பேரில் சரிதாநாயர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பிடிவாரண்டு பிறப்பித்ததை தொடர்ந்து சரிதாநாயர் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அப்போது அவர் தனது வக்கீல் தாமோதரன் மூலம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ‘3 முறை நடந்த வழக்கு விசாரணைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆஜராகவில்லை’ என்று கூறியிருந்தார். அதற்கான டாக்டர் சான்றிதழ்களையும் அவர் தாக்கல் செய்து இருந்தார்.

அதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு ராஜவேலு வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்குதள்ளிவைத்து உத்தரவிட்டார். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சரிதா நாயர் நேற்று காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் சரண் அடைந்தார். பிற்பகலில்தான் அவரது பிடிவாரண்டு திரும்ப பெறப்பட்டது அதுவரை அவர் கோர்ட்டில் காத்திருந்தார். 

மேலும் செய்திகள்