களக்காட்டில் துணிகரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 26½ பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

களக்காட்டில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 26½ பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-02-08 21:00 GMT
களக்காடு,

களக்காட்டில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 26½ பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

கேபிள் டி.வி.ஆபரேட்டர்


நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியைச் சேர்ந்தவர் அரிகரகிருஷ்ணன் (வயது 45). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் களக்காடு ராஜம்நகரில் புதிதாக வீடு கட்டி உள்ளார். கடந்த 4–ந் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடைபெற்றது. அப்போது அரிகரகிருஷ்ணன் வீட்டில் உள்ள பீரோவில் 26½ பவுன் தங்க நகைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அரிகரகிருஷ்ணன் பீரோவை, திறக்க சாவியை எடுக்க சென்றார். அப்போது சாவியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

நகைகள் கொள்ளை

உடனே அவர் பீரோவை உடைத்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 26½ பவுன் தங்க நகைகளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்து சென்றனர்.

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். களக்காட்டில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 26½ பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்