தமிழ்மொழிக் காவலர் தேவநேயப்பாவாணர்

தேவநேயப்பாவாணர் ‘தமிழே உலகின் முதன் செம்மொழி’ என்ற நூலை இயற்றி, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி தமிழின் மேன்மையை உயர்த்தினார்.

Update: 2018-02-07 06:57 GMT
வர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். தமிழ் மொழியின் தனிச் சிறப்பை எடுத்துச் சொல்வதில் அவர் ஈடுபட்டிருந்தார். அவரது ஆராய்ச்சிக்கு உதவிப் பணம் கொடுக்க மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் முன்வந்தன. ஆனால், அவருக்கு ஒரு கட்டுப்பாடு விதித்தன. ‘தமிழின் சிறப்பை எழுதுங்கள். சமஸ்கிருதத்தை ஒப்பிட்டு எழுதாதீர்கள்’ என்று. ஆனால், அந்த பேராசிரியர் ‘எனக்கு வறுமை இருக்கிறது. மனைவி, மக்கள் இருக்கிறார்கள். மானமும் இருக்கிறது’ என்று விடையளித்தார். அவரிடமிருந்தது தன்மானம் மட்டுமல்ல. தமிழ் மானமும் கூட. அவருக்கு தமிழே உயிர் மூச்சாக இருந்ததால், உதவியை அவர் பெற்றுக்கொள்ளவில்லை. பேராசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். அவர் தான் பாவாணர் என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணர்.

பாவாணர் செல்லும் எதிர்புறத்தில் மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த ஒருவன் அவரை மோதிவிட அவர் நிலை தடுமாறி விழுகின்றார். மிதிவண்டியில் மோதியவனோ ‘சாரி’ என்று கூறுகிறான். பாவாணர் வலியைப் பொறுத்துக்கொண்டு, ‘பொறுத்தருளவும் என தமிழில் கூற வேண்டும்’ என்று விளக்குகிறார்.

அவர் இலக்கிய இளங்கலையும், தமிழில் முதுகலை பட்டமும் பெற்றவர். அவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, சமஸ்கிருதம், இந்தி, உருது, ஆங்கிலம், எபிரேயம், லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஜப்பானியம், மேலும் இந்திய பழங்குடி மொழிகள் உள்பட 23 மொழிகளில் புலமைப்பெற்றவர். மொழியியல், சொற்பிறப்பியல், சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி, மொழி ஒப்பீடு, சொற்றொகுப்பு முதலிய துறைகளில் முற்றிய புலமை உடையவராய் விளங்கினார்.

‘சென்சஸ்’ என்பதற்கு, சிசு பால விருத்த ஸ்த்ரீபுருஷவ்ருத்தி சங்கியா என மொழி பெயர்த்துள்ளனர். அதற்கு ‘குடிமதிப்பு’ என சுருக்கமானச் சொல்லை பாவாணர் தந்தார். பேனா-தூவல், பவுண்டன் பேனா-ஊற்றுத்தூவல், ஸ்டூல்-மொட்டான், சிமெண்ட்-சுதைமா, அகராதி-அகரமுதலி, ஏர்கண்டிஷன்-செந்தணப்பு, ஏஜெண்ட்-முகவர், பார்லிமெண்ட்-பாராளுமன்றம் என்று பல புதிய சொற்களை உருவாக்கினார். ‘மண்ணில் விண்’ என்னும் நூலில் மட்டும் 374 புதியச் சொற்களை பொருளுணர்ந்து மொழியாக்கம் புரிந்துள்ளார். மொத்தம் 37 நூல்களில் நூற்றுக்கணக்கான சொற்களை தூய்மையாகவும், எளிமையாகவும் ஆக்கித் தந்துள்ளார்.

தமிழ்மொழியின் தொன்மையை தமிழில் எழுதினால் தமிழர் மட்டுமே தெளிவுப் பெறுவர். மாறாக ஆங்கிலத்தில் எழுதினால் பிறமொழியினரும் தமிழின் பெருமையைப் படித்து அறிவர் என எண்ணி, ‘தமிழே உலகின் முதன் செம்மொழி’ என்ற நூலை இயற்றி, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி தமிழின் மேன்மையை உயர்த்தினார்.

ஒரு பொருட் பன்மொழிக் கலைச்சொல்லாக்கத்தில் வின்ட்-காற்று, கியாஸ்-வளி, ஸ்ட்ரீம்-நீராவி எனபன பாவாணரால் வகைப்பாடு செய்யப்பட்டன. அப்பா என்ற சொல் பாப்பா-பாபால்-போப் என்றும், அம்மா-மம்மா-மம்மி (ஆங்கிலம்), மா (இந்தி) என்றும் தமிழிலிருந்து உருமாறிய சொற்களை விளக்கியுள்ளார். தொலை (தூரம்) என்பதிலிருந்து டெலி வந்தது, அதிலிருந்து டெலிவிஷன், டெலிபோன், டெலிபிரிண்ட், டெலிபிரிண்டர் வந்தன என சுட்டியுள்ளார். தமிழில் வெற்றி என்பது ஆங்கிலத்தில் விக்டரி, போர்-வார், கொல்-கில், வெட்டு-கட், போ-கோ, மடல்-மெடல், கிறுக்கு-கிராக், நாவாய்-நேவி, மாங்காய்-மாங்கோ, அரிசி-ரைஸ்.... போன்ற தமிழிலிருந்து சென்று உருமாறிய பல சொற்களை குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவரான பாவாணர் தமிழ்மொழியில் ஊறித்திளைத்தவர் என்பதால், தம் பிள்ளைகளுக்கு, நச்சினார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்றவாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் என பெயர் சூட்டினார்.

மனிதன் தோன்றிய இடம் அழிந்துபோன குமரிக்கண்டமே. மனிதன் பேசிய முதன்மொழி தமிழே. அதுவே ஞால முதன் மொழி. தமிழ் திராவிடத்துக்கு தாயும், ஆரியத்துக்கு மூலமும் ஆகும் என்பதே பாவாணரின் கோட்பாடாகும். தமிழ் மொழி ஆராய்ச்சியில் 50 ஆண்டு காலம் மூழ்கிக் கிடந்த பாவாணர், தமிழ்தான் உலகின் முதன் மொழி, மூத்தமொழி என்பதை நிலைநாட்டினார். தொன்மை, இயன்மை, தூய்மை, தாய்மை, முன்மை, வியன்மை, வளமை, மறைமை, எண்மை, இளமை, இனிமை, தனிமை, ஒண்மை, இறைமை, அம்மை, செம்மை ஆகிய சிறப்புகள் நம்மொழிக்கு உள்ளதாக வரிசைப்படுத்தினார். அவர், தமிழ்மொழியின் பாதுகாவலராக, தமிழருக்கு படைகலனாக வந்த கடமை வீரர். 7-2-1902 அன்று பிறந்த அவர், 16-1-1981 அன்று மறைந்தார்.

பாவாணர் மறைந்தாலும் அவரது ஆராய்ச்சி தமிழ் ஆர்வலர்களை தூண்டிக்கொண்டு இருக்கிறது. அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். இன்று (பிப்ரவரி 7) தேவநேயப்பாவாணர் பிறந்த நாள். 



பாவலர் மதலைமாரி, பெங்களூரு

மேலும் செய்திகள்