கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா

பள்ளிகளுக்கு மதிய உணவு வினியோகத்தை நிறுத்தியதை கண்டித்து கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2018-02-07 00:09 GMT
பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையின் 2-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து, கல்லடுக்காவில் உள்ள சில பள்ளிகளுக்கு மட்டும் மதிய உணவு திட்டத்தை கர்நாடக அரசு ரத்து செய்துவிட்டதை கண்டித்து பேசினர்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா எழுந்து பேசுகையில், “கல்லடுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு கொல்லூர் மூகாம்பிகை கோவில் மூலம் வழங்கப்பட்டு வந்த மதிய உணவை மாநில அரசு ரத்து செய்துள்ளது. அரசியல் நோக்கத்திற்காக இத்தகைய முடிவை எடுத்தது சரியல்ல. இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாநில அரசு அரசியல் நடத்தக்கூடாது. பழிவாங்கும் அரசியலால் அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் உணவு கிடைக்காமல் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாநில அரசு தனது முடிவை வாபஸ் பெற்று அந்த பள்ளிகளுக்கு மதிய உணவு வினியோகம் செய்ய வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த இந்து அறநிலையத்துறை மந்திரி ருத்ரப்பா லமானி, “கோவில்களுக்கு வரும் வருமானத்தை அந்த கோவில்களின் மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் உள்ளது. இந்த கோவில் நிதியை எடுத்து தனியார் பள்ளிகளுக்கு வழங்க முடியாது. சட்டத்தை மீறி உணவு வழங்கும் முறையை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறி அதை நான் தான் ரத்து செய்தேன். பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அரசே செயல்படுத்தி இருக்கிறது. அந்த திட்டத்தின் கீழ் வேண்டுமானால் சம்பந்தப்பட்ட பள்ளிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

பா.ஜனதா உறுப்பினர் ராமச்சந்திரேகவுடா எழுந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் மாநில அரசு அரசியல் நடத்துவது சரியல்ல என்று கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக் குமார் குறுக்கிட்டு, “மூகாம்பிகை கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் உண்டியல் பணத்தை அந்த கோவில் நிர்வாகத்தினர் தவறாக பயன்படுத்தி உள்ளனர். ரத்து செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மதிய உணவை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால் அந்த கோவில் மூலம் உணவு வழங்க முடியாது“ என்றார்.

இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பதிலுக்கு ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்களும் குரலை உயர்த்தி பேசினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பா.ஜனதா உறுப்பினர்கள் மேலவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்