ரெயில்பாதை உயர் அழுத்த மின் கம்பியை தொட்ட வடமாநில வாலிபர் உடல் கருகினார்

சேலத்தில் ரெயில்பாதை உயர் அழுத்த மின் கம்பியை தொட்ட வட மாநில வாலிபர் உடல் கருகினார்.

Update: 2018-02-06 22:15 GMT
சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை சத்திரம் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் நேற்று மதியம் முதல் சுமார் 30 வயதுடைய வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கும், இங்குமாக இந்தியில் பேசியபடி சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து விரட்டி விட்டனர். ஆனாலும் அவர் போலீசுக்கு தெரியாமல் அங்கேயே சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இரவு 8 மணி அளவில் அந்த வாலிபர் திடீரென அங்கிருந்த ஒரு கம்பத்தில் ஏறி ரெயில்வே பாதையின் மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகிய அவர் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் உடனடியாக அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாலிபரின் பையில் இருந்து ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதில் அந்த நபர், ஒடிசா மாநிலம் கெண்டுஜார் பகுதியை சேர்ந்த கோலகா புகாரி(வயது30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் எதற்காக சேலம் வந்தார்? என்பது பற்றிய விவரம் உடனே தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்