திண்டுக்கல்லில் பெண் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல்லில் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-06 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் திருநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மனைவி நித்யா (வயது 24). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 வயதில் ராம்குமார் என்ற மகன் உள்ளான். சமீபகாலமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை நித்யா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனித்தனி அறையில் தூங்கியதாகவும், காலையில் பார்த்த போது நித்யா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததாகவும் அவருடைய கணவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். எனவே, நித்யா தற்கொலை செய்ததாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நித்யாவின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், நித்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறி அவருடைய உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நித்யாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜான்சன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்