கடலூர் பஸ் நிலையத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம்

கடலூர் பஸ்நிலைய இணைப்பு சாலையில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம் உள்ளது.

Update: 2018-02-06 22:00 GMT
கடலூர்

கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் சாலையில் உள்ள இணைப்பு சாலையில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம் உள்ளது. நேற்று பகலில் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதில் டிரைவர்களிடையே திடீர் பிரச்சினை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் ஷேர் ஆட்டோக்களுடன் திடீரென பஸ் நிலையத்துக்குள்ளே புகுந்தனர். அரசு போக்குவரத்து கழக விசாரணை அலுவலகம் எதிரே காலியான இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி செல்லும் போராட்டம் நடத்தினர். இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரணீதரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஷேர் ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்