கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை கடலூர் கோர்ட்டு உத்தரவு

கட்டிட தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-02-06 22:15 GMT
கடலூர்,

குள்ளஞ்சாவடி அருகே வெங்கடாம்பேட்டை அல்லா கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மகன் செல்வம் (வயது 25). நடுவீரப்பட்டு அருகே நரியங்குப்பம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த கேசவன் மகன் சிவமணி (26). கட்டிட தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

இந்நிலையில் செல்வம் ஏலச்சீட்டு கட்டி வந்த தொகையை சிவமணி கேட்டார். இதனால் ஏலத்தில் ரூ.45 ஆயிரம் எடுத்து சிவமணியிடம் கடனாக செல்வம் கொடுத்தார். இதற்கிடையில் செல்வம் தன்னுடைய தங்கை திருமணத்துக்காக தான் கொடுத்த பணத்தை சிவமணியிடம் திருப்பி கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ரூ.17 ஆயிரத்தை மட்டும் சிவமணி திருப்பி கொடுத்தார். மீதித்தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் செல்வம் பணத்தை கேட்டு அவரிடம் தொந்தரவு செய்தார். இதையடுத்து செல்வத்தை கொலை செய்ய சிவமணி திட்டமிட்டார். அதன்படி கடந்த 28.1.2016 அன்று பணத்தை திருப்பி தருவதாக கூறி செல்வத்தை சிவமணி தன்னுடைய ஊருக்கு அழைத்தார்.

இதை நம்பிய அவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் நரியங்குப்பம் கிராமத்துக்கு சென்றார். அங்கு சென்றதும் அவரது தோட்டத்தில் இருவரும் மது குடித்தனர். அப்போது தான் திட்டமிட்டபடி செல்வத்தை சிவமணி கட்டையாலும், மண்வெட்டியாலும் அடித்துக்கொலை செய்தார். அவரது உடலை நரியன் ஓடையில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டு தலைமறைவானார்.

இது பற்றி செல்வத்தின் அண்ணன் சுரேஷ்கண்ணன் நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவமணியை கைது செய்தனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி (பொறுப்பு) செல்வம் தீர்ப்பு கூறினார். தனது தீர்ப்பில், இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிவமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சார்லஸ் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்