கணவரை தேடி மதுபாருக்குள் புகுந்த புதுப்பெண் ஏன் வந்தாய்? எனக்கூறி தாக்கியதால் பரபரப்பு

கணவரை தேடி மதுபாருக்குள் புகுந்த புதுப்பெண்ணை அவருடைய கணவர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-06 22:15 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவரும், அவருடைய மனைவியும் மோட்டார் சைக்கிளில் குலசேகரம் நோக்கி புறப்பட்டனர்.

அங்கு டாக்டரை பார்த்து சிகிச்சை பெற்ற பின்பு, புதுமண தம்பதி இருவரும் நாகக்கோடு சந்திப்புக்கு வந்தனர். அப்போது, அந்த வாலிபருக்கு மது குடிக்க ஆசை வந்தது. உடனே, மனைவியை கீழே இறக்கி விட்டுவிட்டு, அருகில் உள்ள கடையில் மருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் அந்த இளம்பெண் கணவரை தேடி, அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற திசையை நோக்கி நடந்து சென்றார். அப்போது, ஒரு இடத்தில் கணவரின் மோட்டார் சைக்கிள் நின்றதை கவனித்தார்.

அந்த பகுதி ‘மது பார்’ என்பது தெரியாமல் அந்த இளம்பெண் உள்ளே புகுந்துவிட்டார். அங்கு போடப்பட்டு இருந்த மேஜைகளை சுற்றி அமர்ந்து, மது பிரியர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

மது பாருக்குள் ஒரு இளம்பெண் வந்ததை பார்த்ததும் மதுபிரியர்களுக்கு வியப்பு ஏற்படாமல் இல்லை.

இதற்கிடையே பாரின் ஒரு பகுதியில் அந்த பெண்ணின் கணவர் மது அருந்தி கொண்டிருந்தார். அவர் மனைவியை பார்த்ததும் வேகமாக ஓடி வந்து, ‘இங்கு உன்னிடம் யார் வரச் சொன்னது? உன்னை அங்கு தானே நிற்க சொன்னேன்’ எனக்கூறி ஆவேசமாக திட்டினார். புதுப்பெண் தனது நிலையை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கேட்க தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடங்காமல் மனைவியை நடுரோட்டுக்கு அழைத்து வந்து சரமாரியாக தாக்கினார். அந்த பெண் வலி தாங்க முடியாமல் கதறினார். அந்த வாலிபரை அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் தடுத்தனர். சில ‘குடிமகன்கள்’ நடந்ததை வேடிக்கை பார்த்தனர்.

இத்தனையும் நடந்த பின்பு, அந்த அப்பாவி பெண்ணை அங்கே தனியாக விட்டுவிட்டு, அவரின் கணவர் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு சென்றுவிட்டார். அந்த பெண் செய்வது அறியாமல் தேம்பி தேம்பி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஊருக்கு செல்ல கையில் காசு இல்லை என்று அந்த பெண் கூறியதை கேட்டு, நல் உள்ளம் படைத்தவர்கள் அந்த பெண்ணுக்கு காசு கொடுத்து அவர் தனது ஊருக்கு செல்ல பஸ் ஏற்றி, அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

மேலும் செய்திகள்