பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்: அரசு கல்லூரி மாணவர்கள் 3 பேர் இடைநீக்கம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவர்களில் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து வரலாற்றுத்துறை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-06 23:00 GMT
தாமரைக்குளம்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரசியல் கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அரியலூரில் உள்ள அரசு கலை கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த வாரம் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து நேற்று மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. அப்போது கல்லூரியின் வரலாற்றுத்துறையை சேர்ந்த மாணவர்கள் ராம்குமார், விஜய், ராமசாமி ஆகிய 3 பேரும் வந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து தான் மாணவர்களை திரட்டி போராட்டத்தை தூண்டி விட்டதாக கூறி ராம்குமார், விஜய், ராமசாமி ஆகிய 3 பேரையும் இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சிற்றரசு உத்தரவிட்டார்.

இதனால் அந்த 3 பேரும் வகுப்பறைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையறிந்த வரலாற்று துறையை சேர்ந்த மாணவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்ட 3 மாணவர்களையும் மீண்டும் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தினுள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.“இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரும் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு பெற்றோருடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு அவர்களது கருத்துகள் குறித்து கல்லூரி கமிட்டி கூடி ஆலோசித்து முடிவெடுக்கும்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்