திருமூர்த்தி அணை அருகே உடைப்பு பகுதி சீரமைக்கப்பட்டதால் பி.ஏ.பி.கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது

திருமூர்த்தி அணை அருகே பி.ஏ.பி. கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2018-02-06 21:30 GMT
தளி,

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளின் மூலம் நீர்வரத்து ஏற்படுகின்றது. மேலும் பி.ஏ.பி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாகவும் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறப்படுகிறது.

பி.ஏ.பி பாசன திட்டத்தின் மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான குடிநீர்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பிரதான கால்வாய், உடுமலை கால்வாய், தளி வாய்க்கால் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாக 4 மண்டலங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலமாக விவசாயிகள் தென்னை, கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் களையும் கத்தரி, வெண்டை, பீட்ரூட், அவரை போன்ற காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 31-ந்தேதி முதலாம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த 2-ந்தேதி திருமூர்த்தி அணை அருகே உள்ள பங்களாமேடு பகுதியில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. கால்வாயில் சென்று கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர்் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கால்வாயில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் மாலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பி.ஏ.பி பிரதான கால்வாயில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திடீரென உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் கடைமடைக்கு வந்து சேருவதற்கு முன்பாகவே நின்றுவிட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அத்துடன் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து சேருவதற்குள் 2 நாட்களாகி விடும். மேலும் உடைப்பு காரணமாக சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நிலங்களில் விதைப்பு பணிகள் முழுமையாக நிறைவுபெறவில்லை. இதனால் அந்த நிலங்களுக்கு கூடுதலாக தண்ணீர் தேவைப்படுகின்ற சூழல் கடைமடை பகுதியில் நிலவுகிறது. அதனால் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்ட நாட்களுடன் சேர்த்து கூடுதலாக சில நாட்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகள் முன் வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்